sports

டெல்லிக்கு எதிரான போட்டியில் சம்பவம்.. தோனிக்கு 12 லட்சம் அபராதம்; ஐபிஎல் நிர்வாகம் அதிரடி!

77views

ஐபிஎல் நிர்வாகத்தின் நன்னடத்தை விதியை மீறியதன் காரணமாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனிக்கு 12 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்திருந்தது. துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், மொயின் அலி மற்றும் ரெய்னா இருவரும் அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

பின்னர் வந்த சாம் கரண் மற்றும் ஜடேஜா இருவரும் இறுதிகட்டத்தில் பவுண்டரிகள் விளாசி அணிக்கு நல்ல ஸ்கோரை எட்ட உதவினர். இதனை அடுத்து பேட்டிங் செய்ய வந்த டெல்லி அணிக்கு துவக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் தவான் இருவரும் அனாயசமாக சென்னை வீரர்களின் பந்துவீச்சு எதிர்கொண்டு பவுண்டரி சிக்சர்களாக விளாசினர். இதன் மூலம் இருவரும் அரைசதம் கடந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது.

இவர்களின் விக்கெட்டை எடுக்க திணறிய சென்னை அணிக்கு மறுபக்கம் அதிக அளவு அழுத்தம் வரத்தொடங்கியது. பிரித்வி ஷா 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தவான் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 18.4 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்து டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. சென்னை அணி அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவரை வீசி முடிக்க தோனி தலைமையிலான அணி தவறியதனால், ஐபிஎல் நன்னடத்தை விதிப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு கிட்டத்தட்ட 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இது அவரது ஒட்டு மொத்த சம்பளத்திலிருந்து பிடிக்கப்பட்டு அபராதமாக செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கிலும் தோனிக்கு படுமோசமாக அமைந்திருக்கிறது. இரண்டு பந்துகள் பிடித்து ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். 2015ஆம் ஆண்டிற்கு பிறகு ஐபிஎல் போட்டிகளில் தோனி டக் அவுட் ஆவது இதுவே முதல் முறையாகும்.

கிட்டத்தட்ட 700 நாட்களுக்கு பிறகு சென்னை அணிக்காக விளையாடும் ரெய்னா, இந்த போட்டியில் 36 பந்துகளில் அரைசதம் கடந்து நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடினார். மிடில் ஓவர்களில் இவரது ஆட்டம் சென்னை அணிக்கு மிகப் பெரிய பங்களிப்பாக அமைந்தது. ஒரு கட்டத்தில் சென்னை அணி 150 ரன்களை கடப்பது கடினம் என்று இருந்தபோது, தனது அதிரடியால் 188 ரன்கள் வரை எடுத்துச் செல்வதற்கு உதவியதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த போட்டி வருகிற ஏப்ரல் 16ஆம் தேதி நடக்க உள்ளது. இதில் சென்னை அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Leave a Response

error: Content is protected !!