IndiammKmuslimpublic interestsocial media

வீட்டிற்குள் கூச்சலிட்டவாறு நுழைந்து பெட்ரோல் குண்டு வீச்சு! முஸ்லீம் லீக் தொண்டரை தீர்த்துக்கட்டிய மார்க்சிஸ்ட் கும்பல்!

1.81Kviews

கேரளாவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் 21 வயது தொண்டர் மன்சூர் என்பவர் வீடு புகுந்த கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணூர் மாவட்டம் குத்து பரம்பரா அருகே உள்ள புல்லுக்கராவைச் சேர்ந்தவர் பாரல் மன்சூர். 21 வயதான இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவர். இவர் தனது வீட்டில் இருந்தபோது, உள்ளே புகுந்த 12 பேர் அடங்கிய கும்பல், அவரை சரமாரியாக வெட்டியுள்ளது.

இதனை தடுக்க முயன்ற, அவரது சகோதரர் முக்சைன் என்பவரும் கொடூரமாக வெட்டப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மன்சூர் உயிரிழந்தார்.
இந்தச் கொலைச் சம்பவம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என இந்திய யூனியன் முஸ்லீம் கண்ணூர் மாவட்ட கமிட்டி குற்றம் சாட்டியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஒருவரை கஸ்டடியில் வைத்து குத்துப்பரம்பரா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அவரிடம் தாக்குதலில் ஈடுபட்ட மேலும் 11 பேர் குறித்து விசாரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
சரியாக இரவு 8 மணியளவில், 12 பேர் அடங்கிய கும்பல் அப்பகுதியில் பெரும் கூச்சலுடன் நுழைந்து, வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசி, அதிர்ச்சியடைந்த நிலையில், இருந்த மன்சூர் மற்றும் அவரது சகோதரர் மீது, கொலை வெறித் தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் நடைபெற்ற போது, முஸ்லீம் லீக் மற்றும் இடதுசாரி தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இந்த வாக்குவாதமே, மோதலுக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் முதலில் தலச்சேரி இந்திரா காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் கோழிக்கோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இரவு 1 மணியளவில், மன்சூர் இறந்து விட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. போலீசாரால் கைது செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர் சினோஜ் என்பவர் மன்சூரின் வீட்டில் அருகில் வசிப்பவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தைச் தொடர்ந்து, குத்துப்பரம்பரா சட்டமன்ற தொகுதியில் புதன்கிழமை பந்த் நடத்த காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இதுகுறித்து டுவிட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ள எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, மார்சிஸ்ட் கட்சியால், இன்னொரு தாய், தனது மகனை இழந்து விட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

தோல்வி பயம் மற்றும் விரக்தி ஆகியவற்றின் காரணமாக இந்தச் செயலில் ஆளும் கட்சி ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை பாதுகாப்பதை விட்டுவிட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க ஆளும் பினராயி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Response

error: Content is protected !!