வாக்குப்பதிவு இயந்திரம் கடத்தலா? மடக்கிப் பிடித்த swiggy டெலிவரி பாய்? வேளச்சேரியில் நடந்தது என்ன?

சென்னை வேளச்சேரியில் இரு சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்களால் பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தரமணியில், இரு சக்கர வாகனத்தில் சென்றவர் திடீரென தடுமாறி கீழே விழுந்துள்ளார். அவருக்கு உதவி செய்ய அப்பகுதி மக்கள் கூடியுள்ளனர். அப்போது, அந்த பைக்கில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்தது கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வாக்குப்பதிவு இயந்திரத்தை, காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் எங்கே எடுத்துச் செல்கிறீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினர். Swiggy உணவு டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவரும், அவர்களை பிடித்து, சரமாரி கேள்வி எழுப்பினார்.
இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கம் தி இந்து ஆங்கில இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சி ஊழியர் ஒருவர், ஒரு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், ஓட்டு சரிபார்க்கும் விவிபாட் உள்ளிட்டவற்றை இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றதாக தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது. எடுத்துச் சென்றவருக்கு துணையாக, மேலும் இரண்டு ஊழியர்கள் சென்றதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தரமணி லிங்க் ரோட்டில் வாகனம் சென்றபோது, தடுமாறி விபத்துக்களானதாகவும், அப்போது, வாக்குப்பதிவு எந்திரங்கள் கீழே விழுந்ததாகவும் தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது. எனினும் அந்த வாக்குப்பதிவு எந்திரம் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்டது அல்ல என்றும் அவசர தேவை ஏற்பட்டால் பயன்படுத்துவதற்காக, ரிசர்வ் செய்து வைக்கப்பட்ட ஒன்று என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. எனினும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இதனிடையே பொதுமக்கள் மடக்கிப் பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரமாக இருந்தாலும், ஏன் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்படாமல், இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது என்ற கேள்வி பொதுமக்களால் எழுப்பப்படுகிறது. இப்படி எத்தனை இயந்திரங்கள் ரிசர்வ் செய்து வைக்கப்பட்டிருந்தன, அவை எந்த வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது, என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. பல்லாயிரம் கோடி செலவு செய்து நடத்தப்படும் தேர்தலில், வாக்குப்பதிவு இயந்திரங்களை கூட கொண்டு செல்ல, வேன் உள்ளிட்ட முறையான வாகனங்கள் இல்லையா என்ற கேள்வியும் பொதுமக்களால் முன்வைக்கப்படுகிறது.