துவக்கி வைத்த திமுக – முடித்து வைத்த எஸ்டிபிஐ! ஆலந்தூரில் நடந்தது என்ன?

ஆலந்தூர் தொகுதி எஸ்டிபிஐ கட்சி அலுவலகம் அருகே அந்த தொகுதியின் வேட்பாளர் தமிமுன் அன்சாரிக்கு குக்கர் சின்னத்தில் வாக்கு கேட்டு, அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது தலைமையிலான நிர்வாகிகள் இறுதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென அப்பகுதிக்குள் திமுகவின் தேர்தல் பிரச்சார வேன் மற்றும் 100க்கணக்கானோர் இரு சக்கர வாகனங்களில் ஒலி எழுப்பியபடி வந்துள்ளனர். எஸ்டிபிஐ கட்சியினர், அப்போது, உங்கள் ஓட்டு குக்கருக்கே என முழக்கங்களை எழுப்பியடி அங்கு குழுமியிருந்தனர். அப்போது, திமுகவினரை கடந்து போக விடும்படி, எஸ்டிபிஐ தலைவர்கள், தங்கள் கட்சி நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.
திமுக கூட்டணி கட்சியினரும் கடந்து போய் கொண்டிருந்த போது, திமுக கூட்டணியில் உள்ள ஒரு சிறுபான்மை கட்சியைச் சேர்ந்த நிர்வாகி, குக்கர் சின்னத்திற்கு வாக்கு கேட்டு முழங்கிய எஸ்டிபிஐ கட்சியினரை பார்த்து, ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்பிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, திமுக கூட்டணியினர் சிலர் எஸ்டிபிஐ நிர்வாகிகள் மீது, பைப்களை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த எஸ்டிபிஐ நிர்வாகிகள் சாலை அமர்ந்து திமுகவினரை மறித்தனர்.
இந்த காட்சிகளை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த, திமுக வேட்பாளர் தாமோ அன்பரசன், அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி ஆகியோர், 5 நிமிடம் விட்டால் நாங்கள் அந்த பக்கம் போய்க் கொள்வோம் என கேட்டுள்ளனர். இதனையடுத்து, எஸ்டிபிஐ தலைவர்கள் சாலையில் இருந்து எழுந்து, வழிவிடுமாறு தங்கள் கட்சி தொண்டர்களை மீண்டும் வலியுறுத்தினர்.
பின்னர் மீண்டும்,திமுக கூட்டணியினர், கடந்த சென்றபோது, எஸ்டிபிஐ அமைப்பின் பெண் நிர்வாகிகள் இருந்த கூட்டத்தின் மீது, திமுக தரப்பில் இருந்து, பைப்பால் தாக்குதல் நடத்தியதாகவும், பெண்களை ஒருமையில் பேசியதாகவும், சம்பவ இடத்தில் இருந்த ஒரு பெண் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
எஸ்டிபிஐ நிர்வாகிகள் தாக்கியதில் தங்களுக்கு காயம் ஏற்பட்டதாக திமுக தரப்பிலும் குற்றறம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்த நிலையில், திமுகவினர் அங்கிருந்து சென்றனர். எஸ்டிபிஐ கட்சியினர் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, திமுகவினர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதே போல் திமுக தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.