chennai

வாகனத்தில் வைத்து பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை – பீலா ராஜேசின் கணவர் மீது விசாரணை

728views

பெண் ஐபிஎஸ் அதிகாரியை வாகனத்தில் வைத்து பாலியல் துன்புறுத்தல் அளித்த புகாரில், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேசின் கணவரும், சிறப்பு காவல்துறை இயக்குநருமான ராஜேஸ் தாஸ் மீது, விசாரணை நடத்த, உள்துறை அமைச்சகம், விசாரணைக்குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.


உள்துறை செயலாளர் எஸ்கே பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெய ஸ்ரீ ரகுநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழுவில் காவல்துறை உயர் அதிகாரிகள், சீமா அகர்வால், சாமுண்டீஸ்வரி, வி.கே. ரமேஷ் பிரபு, லோரெட்டா ஜோனா ஆகிய அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.


இதுகுறித்து நியூஸ் மினிட் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், ராஜேஸ் தாஸின் வாகனத்தில் வைத்து, பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்டதாகவும், இதுகுறித்து புகார் அளிக்க முயன்றபோது, சில காவல்துறை உயர் அதிகாரிகள், பெண் அதிகாரியை தடுத்ததாகவும், பின்னர் அவர் மீது தீர்க்கமாக புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பல பெண் காவல்துறை உயர்அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்ததோடு, ஊக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


காவல்துறை உயர்அதிகாரிகள் மட்டத்தில் பாலியல் புகார் எழுவது இது முதல்முறையல்ல. கடந்த 2018 ஆகஸ்ட் மாதம், அப்போதைய லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநராக இருந்த எஸ். முருகன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. காவல்துறை எஸ்.பி.யாக இருந்த பெண் அதிகாரி ஒருவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தினார்.


இதுகுறித்து விசாரிக்க, டிஜிபி மட்டத்திலான அதிகாரியாக இருந்த, லட்சுமி பிரசாத் நியமிக்கப்பட்டார். ஆனால், இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்த, பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி,…. விசாரணைக்குழு, தவறு செய்த அதிகாரி முருகனுக்கு ஆதரவாக இருப்பதாக, குற்றம்சாட்டினார். இதனால் விசாரணையை, தெலங்கானா போலீசுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவுக்கு 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.


இதனிடையே டிஜிபி ராஜேஸ் தாஸ் கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Response

error: Content is protected !!