அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் – 5 முட்டுக்கட்டைகள் !

எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பதை விட, உருத் தெரியாமல் அழிக்க வேண்டும் என்பதே தமிழக நலன் விரும்பிகளின் எண்ணமாக உள்ளது. இதனை செயல்படுத்துவதில் உள்ள 5 முக்கிய முட்டுக் கட்டைகளை பார்க்கலாம்.
1.) துரைமுருகன்

முதல் முட்டுக்கட்டை திமுகவின் பொதுச் செயலாளரான துரைமுருகன். இவரது பாஜக மற்றும் பாமக பாசம், திமுகவிற்கு வேட்டு வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் கடைசி நேரம் வரை பாமகவை திமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அது முடியாமல் போகவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தங்கள் கூட்டணியில் திமுக சேர்த்தது. அதே போல் பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல என்றும் காங்கிரஸ் இல்லாமலும் திமுகவால் போட்டியிட முடியும் என்றும் தனது மதவெறி சிந்தனைகளையும் அவ்வப்போது, உதிர்த்து வருகிறார். இவர் விசயத்தில் திமுக தலைமை எச்சரிக்கையாக இல்லாவிட்டால், பாதிப்பு திமுகவிற்கு தான்.
2 பிரசாந்த் கிஷோர்

அடுத்ததாக பிரசாந்த கிஷோர். திமுகவின் ஒரு ஒன்றியச் செயலாளர் கூட 100 பிரசாந்த் கிஷோருக்கு சமம். தேர்தல் காலங்களில், திமுக, அதிமுக வகுக்கும் தேர்தல் யுக்திகள், வெற்றி வியூகங்கள் எந்த தேசிய கட்சிகளாலும் வகுக்க முடியாதவை. ஆனால் கட்சி தொண்டர்களை நம்பாமல், பிரசாந்த் கிஷோரை தேர்தல் ஆலோசகராக நியமித்தார் ஸ்டாலின். இவரது ஒரு யோசனை தான் புதுச்சேரியில் திமுக ஆட்சியை அமைப்பது. துவரம்
பருப்பு இருக்கிறதா என்று கேட்டால் பாசிப்பருப்பு இருக்கிறது என்று பதில் சொல்லும், மளிகைக் கடைக்காரரைப் போல், தமிழகத்தில் ஆட்சி அமைக்க வழிகேட்டால், யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் ஆட்சி அமைக்க வழி சொல்லியுள்ளார் பிரசாந்த் கிஷோர். இதன்மூலம் மோடியின் காங்கிரஸ் இல்லா இந்தியா கனவை நிறைவேற்ற உள்ளார். இவரது ஆலோசனைகள் திமுகவை வெற்றி பெற வைக்கிறதோ, இல்லையோ, நிச்சயம் பாஜக எதிர்ப்பு சக்திகளை பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
3 பாமக

அடுத்ததாக பாமக. பாமக திமுக கூட்டணியில் இடம்பெற்றால், திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகளுக்கு தர்ம சங்கடமான சூழல் ஏற்படும். விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறவும் வாய்ப்புள்ளது. வட மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி விடுதலை சிறுத்தைகளுக்கு உண்டு. மேலும் பாமக எதிர்ப்பு தலித் வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்புண்டு. பாமகவை விட தற்போது, வன்னிய சமூகத்தில் அதிக செல்வாக்குடன் களமிறங்கும் வேல்முருகனை திமுக உரிய பிரநிதித்துவம் கொடுத்து கூட்டணியில் சேர்க்கலாம். இது வேல்முருகன் போன்ற தமிழக நலன் விரும்பிகளை பலப்படுத்தும் என்பதோடு, சாதியவாத, மதவாத சக்திகளுக்கும் பின்னடைவை ஏற்படுத்தும்.
4.) தனிச் சின்னம்

அடுத்ததாக தனிச் சின்னம் விவகாரம் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை, அதிமுக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்பதே தமிழக மக்களின் கூட்டு மனசாட்சி சொல்லும் செய்தி. அதே நேரம், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, சாதியவாத, மதவாத, சந்தர்ப்பவாத கட்சிகளான, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள், எந்த இடத்திலும் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதே மிக முக்கியம். எனவே கூட்டணிக் கட்சிகள் 25 சதவீதம் தனிச் சின்னத்திலும், 75 சதவீத இடங்களில் திமுகவின் உதய சூரியன் சின்னத்திலும் நிற்பதே, அந்த கூட்டணிக்கு நல்லது. உதாரணத்திற்கு, கடந்த மக்களவைத் தேர்தலில், திருமாவளவன், தனிச் சின்னத்திலும், அவரது கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார் உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். உதயசூரியன் சின்னம் அனைவராலும் அறியப்பட்ட சின்னம் என்பதோடு, திமுக நிர்வாகிகளும், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முழு வீச்சில் பணியாற்றுவார்கள். தனிச் சின்னத்தில் போட்டியிட்டு, தாங்கள் தோற்பதோடு, அந்த தொகுதிகளை பாஜக, பாமக போன்ற கட்சிகளுக்கு தாரை வார்ப்பது நல்லதா? அல்லது உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, எதிர்கட்சி கூட்டணியை பூஜியம் ஆக்குவது நல்லதா என்பதை திமுக கூட்டணி கட்சிகளே முடிவு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் கை சின்னத்தில் போட்டியிட்ட காங்கிரஸ், 40 தொகுதிகள் பெற்று, 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும் அறியப்படாத தனிச் சின்னத்தில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 5 இடங்கள் பெற்று ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், பெருந்தமிழர் மக்கள் கட்சி, தமிழக விவசாயிகள் தொழிலாளர் கட்சி, சமூக சமுத்துவப் படை ஆகிய கட்சிகள் தங்களுக்கு கொடுத்த அனைத்து இடங்களையும் இழந்தன. இதனால் திமுக வெறும் 1 சதவீ வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. எனவே இந்த முறை, கூட்டணி கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் அவர்களுக்கு திமுக தொகுதிகளை ஒதுக்குவதோடு, சின்னம் இல்லாத கட்சிகள் 50 சதவீத இடங்களில் மட்டுமே தனிச் சின்னத்திலும் மீதமுள்ள 50 சதவீத இடங்களில் உதய சூரியனில் மட்டுமே போட்டியிட அனுமதிக்க வேண்டும். அப்படிச் செய்தால், திமுக இந்த முறை 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவது உறுதி.
5.) பணபலம் மற்றும் அதிகார பலம் :

அதிமுக மாநிலத்தில் ஆட்சி செய்யும் கட்சி, பாஜக மத்தியில் ஆட்சி செய்யும் கட்சி. எனவே தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பல அமைப்புகள் இந்த கூட்டணிக்கு மறைமுகமாக உதவி செய்வார்கள் என்று நம்பப்படுகிறது. இதுமட்டுமின்றி கடந்த இடைத் தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க, அதிமுக ஒரு வாக்கிற்கு எவ்வளவு செலவு செய்தது என்பது அந்த தொகுதி மக்களுக்குத் தெரியும். இந்த முறையும் பணத்தை நம்பியே எடப்பாடி களத்தில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த சவாலை திமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தல் திமுக கூட்டணிக்கு உற்சாக டானிக்காக இருந்தாலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் அது எதிரொலிக்குமா என்ற சந்தேகமும் உள்ளது. இந்த முட்டுக்கட்டைகள் நீங்குமானால், திமுக ஆட்சிக்கு வருவதோடு, சாதியவாத, மதவாத, சந்தர்ப்ப வாத சக்திகளுக்கு பாடமாகவும் அமையும்.