பிரபல பெண் தாதா எழிலரசி இனி பாஜக பிரமுகர் என அன்போடு அழைக்கப்படுவார்! 3 கொலைகள் மட்டுமே செய்தவர்!

3 கொலைகள் செய்த பிரபல பெண் தாதா, பாண்டிச்சேரி சொர்ணாக்கா என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த எழிலரசி, இனி பாஜக பிரமுகர் என அன்போடு அழைக்கப்பட உள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் திருப்பட்டினத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி ராமுவின் இரண்டாவது மனைவி தான் எழிலரசி. ராமு இரண்டாவதாக திருமணம் செய்தது, அவரது முதல் மனைவி வினோதாவுக்கு பிடிக்காத நிலையில், தனது கணவர் மற்றும் அவரது இரண்டாவது மனைவியை தீர்த்துக் கட்ட கூலிப்படை அனுப்பினார். கூலிப்படை நடத்திய தாக்குதலில் ராமு இறந்த நிலையில், எழிலரசி மட்டும் காயத்துடன் தப்பித்தார்.

இதனையடுத்து, ராமு கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை அடுத்தடுத்து தீர்த்துக்கட்டி, புதுச்சேரியில் மிகப்பெரும் பெண் தாதாவாக உருவெடுத்தார் எழிலரசி. இதனால் வழக்குகள் பாய, குண்டர் சட்டம் உள்ளிட்ட பல வழக்குகளில் சிறையில் இருந்து பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இடையே சமூக சேவை என இறங்கி, காவி உடை உடுத்தத் தொடங்கிய எழிலரசி, அண்மையில் சென்னையில் பல ரவுடிகள் பாஜகவில் ஐக்கியம் ஆவதை கேள்விபட்டுள்ளார். இதனால் ஈர்க்கப்பட்ட எழிலரசியும் புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் முன்னிலையில் தன்னை தேசிய, நாட்டப்பற்றுள்ள கட்சியான பாஜகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.