fact check

தனது மடியில் இருந்து தனது பாலையே குடிக்கும் பசு – உலகம் அழியப் போவதாக பீதி

928views

சென்னை அமைந்தகரையில் தனது, மடியில் இருந்து பசு ஒன்று தனது பாலையே குடிப்பதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இப்படி தனது மடியில் இருந்து ஒரு பசு தனது பாலையே குடித்தால், அது கலியுகம் முடிந்து உலகம் அழிவதற்கான அறிகுறி என்றும் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.


முதலில் இந்த வீடியோ சென்னை அமைந்தகரையில் எடுக்கப்பட்டது தானா என்பது சந்தேகத்திற்குரியது. காரணம் இந்த வீடியோ தொடர்பாக இதற்கு முன்பு பல பதிவுகள் கூகுளில் இடப்பட்டுள்ளன.


அவை அனைத்தும் இந்தி மொழியில் உள்ளன. எனவே இந்த வீடியோ, வேறு மாநிலத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இந்த வீடியோவை, தெலங்கானா மாநில பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் தலைவர் ரூப் தாரக் என்பவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளதோடு, GAU (கவ்) மாதா, தனது மடியில் இருந்து, தனது பாலையே குடிப்பதை நான் இதுவரை பார்த்ததில்லை என தெரிவித்துள்ளார்.


அவரது பதிவு குறித்து கருத்து தெரிவித்த பலரும் கலியுகம் முடிந்து உலகம் அழியப் போகிறது என அச்சம் தெரிவித்திருந்தனர்.


இதே வீடியோ, இதே கருத்துக்களுடன் இந்தி மொழியில் பல்லாயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகிறது.


இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் சிலரிடம் q7 சார்பாக விளக்கம் கேட்கப்பட்டது. அவர்கள் அளித்த விளக்கத்தை அதனை அப்படியே தருகிறோம்.

பொதுவாக இளம் வயதுடைய பசுக்களில் Inter Sucking அல்லது Self Sucking முறை அரிதாக காணப்படுகிறது. அதாவது, ஒரு பசு, தனது மடியில் இருந்தோ, அல்லது, தனது வயதையொத்தை இன்னொரு பசுவின் மடியில் இருந்தோ, பால் குடிப்பது சில சூழல்களில் நடைபெறக் கூடிய ஒன்று தான் எனத் தெரிவித்துள்ளனர்.


வயதான பசுக்களை விட புதிதாக கன்று ஈன்ற பசுக்கள், இவ்வாறான பழக்கத்திற்கு ஆட்படுவதாக கூறியுள்ளனர். முதன்முறையாக குட்டி ஈன்ற பசுக்கள் மற்றும் எருமை மாடுகள், 25 சதவீதம், இதுபோன்று தனது பாலை தானே குடிக்கும் வழக்கம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


அதே போல் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை குட்டி ஈன்ற பசுக்கள் மற்றும் எருமைகளில் இந்த பழக்கம் 4.3 சதவீதமாக இருக்கிறது.
ஒரு பசு தன் மடியில் இருந்து தானே பால் குடிப்பது போல், தனது வயதை ஒத்த மற்ற பசுவின் மடியில் இருந்தும் பால் குடிக்கும் வழக்கமும் உள்ளது.
பொதுவாக பசுக்கள் மாலை நேரம் பசி ஏற்படும் போது, இவ்வாறாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.


பெரிய அளவிலான கூட்டத்தில் இருக்கும் மாடுகள் இடையேயும், சில நேரங்களில் மரபணு பிரச்னை காரணமாகவும், இந்த பழக்கம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.


பசுக்கள் தனது பாலை, ஏற்கனவே வெளியேற்றி விடும் இந்தப் பழக்கத்தால் பால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதாகவும், மடியில் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


பெரிய மாடுகள், தனது வயதை ஒத்த மாடுகளின் மடியில் இருந்து பால் அருந்துவதை தடுக்க, முறையாக வடிவமைக்கப்பட்ட, மூக்கு வளையங்கள் அணிவிக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மேலும் இந்த சுய பால் அருந்தும் முறையை தடுக்க, வெளிநாடுகளில் பிரத்யேகமாக சேனம் தயாரிக்கப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது.
neck cradles எனப்படும் கழுத்து தொட்டில்கள்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


மேலும் சுய பால் அருந்தும் பசுக்களின் மடிகளில் கசப்பானவற்றை தடவுவதன் மூலம் இதனை தடுக்கலாம் என அறிவுரை கூறுகின்றனர்.
இதைவிட சிறந்த வழி, கன்று ஈன்ற பசுக்களில் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும் போது, அதனை குறிப்பிட்ட இடைவெளிகளில் கறந்து விடுவதும் சிறந்து முறை என தெரிகின்றனர். மடி நிறைந்து பால் வழியும் சூழல் ஏற்படும் போது, இதுபோன்று பசுக்கள் சுய பால் அருந்துதலுக்கு தள்ளப்படுவதாக கூறப்படுகிறது.


கிராமப்புற பால் விவசாயிகளுக்கு நன்கு தெரிந்த இந்த முறை, நகர்புறங்களில் இருப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. எனவே புதிதாக இந்த காட்சிகளை பார்ப்பவர்கள், அதனை பற்றி அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராயாமல், மதத்தோடு கலந்து, பார்ப்பது பிரச்னையை ஏற்படுத்துகிறது.


மேலும் உலகம் தற்போது அழிவதற்கான சூழல் இல்லை என்றும், இதுகுறித்து வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் அண்மையில் அமெரிக்காவின் நாசா தெரிவித்த நிலையில், மத அடிப்படையிலான பழமைவாதிகள், விசித்திரமான சம்பவம் எது நடந்தாலும் உலகம் அழியப்போவதாக பூச்சாண்டி காட்டுவது வாடிக்கையாகியுள்ளது.
Q7 செய்திகளுக்காக செய்தியாளர்கள் குழு…

Leave a Response

error: Content is protected !!